முளைப்பு
திடுமென ஒரு கணத்தில், ஆண்டுகள் சிலவற்றுக்கு முன்னே,
சிறுவனான நான் முழு மனிதனாக மாறிப் போனேன்:
திடீரென என் வாழ்வைத் தொடங்கினேன்!
முன்னே உலகைக் கண்டேன் - அங்கே
குதிரைக்கட்டி ஏர் உழுபவன், தன் குதிரைகளுக்கு அருகே நிற்கக் கண்டேன்,
தன் முதல் குன்றின் உச்சியின் வளைவிலேயே வியர்வை கசிய நின்றிருந்தான்.
ஆற்றுப்படுகைகளை விட்டு விலகி வந்து விட்டான்,
கீழிருக்கும் பள்ளத்தாக்கின் குறு மடிப்புகளில் ஆழ்ந்து நின்றுக்கொண்டு,
உழுவதற்கான ஒரு மலைச்சரிவைக் காண்கிறான்,
வெற்று பாறைகள் அவனது ஏர்முனையை மழுங்கடிக்கவும்
இடியோசை காற்றில் பற்றியிருக்கவும்,
நெடிந்துயரும் கருஞ்சிகரம் வெறுமையாய் மேலே நின்றிருக்கவும்,
இப்போது காத்திருக்கின்றான் அவன்.
-நெஞ்சில் துணிவிருந்தால் உழுதுபார்க்கட்டும்!